• திருஞானசம்மந்தர்
    Thirugyanasambandhar
    அப்பர்
    Appar
    சுந்தரர்
    Sundarar
    மாணிக்கவாசகர்
    Manikkavasakar
Next Pradosham on: Fri Mar 22 2024
Page 1   |    Page 2
திருஞான சம்பந்தமூர்திகளின் தேன் சொட்டும் தேவாரம்
ANALYTICAL PRESENTATION OF SRI THIRUGYAANA SAMBANDHAR’s THEVARAM
பதிப்புரை தகவல்
தேவாரம் - ஒர் எளிய அறிமுகம் - உள்ளம் கவர் கள்வன் | பகுதி ஒன்று -பக்கம் ஒன்று | பண்டம் : வஸ்து, பொருள் | திறட்டியவர் : ஈஷ்வர் கோபால்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய கடலைப் பொடி பூசியென்னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமலரான் முனை நாட்பணிந் தேத்தவருள் செய்த
பீடுடையபிர மாபுர மேவிய பெம்மானிவனன்றே'. திருஞானசம்பந்தர்
தேவாரத் திருமுறைகளின் தொடக்கம்
சிவபெருமானுடைய புகழைச் சொல்லும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு திருமுறைகளில் முதல் ஏழும் தேவாரம் என்னும் பெயரை உடையவை. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் ஐவரும் பாடியவற்றைத் தேவாரம் என்று வழங்குவர். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருகோவையாரும் எட்டாந் திருமுறை. திருவசைப்பா, திருப்ல்லாண்டு ஒன்பதாம் திருமுறை. திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறை. ஆலவாய் இறைவன் திருமுகப்பாசுரம் முதல் காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய பலர் பாடிய நூல்களின்தொகுதி பதினோராந்திருமுறை எனப்பெறும். பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாகும். 

முதல் இராஜ ராஜ சோழன்காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்னும் பெரியார் பதினொரு திருமறைகளை வகுத்தார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. அம்மன்னன் காலத்துக்குமுன் தேவாரப் பதிகங்கள் முதலியன பலவாறாகப் பாடப்பெற்று வந்தன. அவற்றைக் கண்டெடுத்து ஒழுங்குபடுத்தி தொண்டு புரிந்தவன் இராஜ ராஜ சோழன்.

இந்தப் பன்னிரண்டு திருமுறைகளில் முதல் மூன்றும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இயற்றியவை. நான்குமுதல் ஆறாவது திருமுறைகள் வரையில் உள்ளவை திருநாவுக்கரசு நாயனார் இயற்றியவை. ஏழாவது திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது. இந்த ஏழுமே தேவாரம் என்றும் அடங்கல்முறை என்றும் வழங்கப்பெறும். 

திருமுறை என்பதற்குத் தெய்வத் தன்மையையுடைய நூல் என்பது பொருள். முறை - நூல், திரு - தெய்வத் தன்மையைக் குறிக்கும் அடை. தேவாரம் என்பதற்குப் பலவிதமாகப் பொருள் கூறுவர். தெய்வத்தின்பால் உள்ள அன்பினாற் பாடப்பெற்ற பாடல் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள். வாரம் - அன்பு, தெய்வத்துக்கு ஆரம்போல அமைந்த்தது என்பாரும் உளர். 'தே' என்பது தெய்வத்தைக் குறிக்கும் சொல். வாரம் என்பது இசைப்பாட்டு வகையில் ஒன்று. அது சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடைய தென்றும், இசைக்குரிய உருப்படிகளில் ஒன்றென்றும், தெய்வத்தைப் பாடும் பாடலென்றும், தாள அமைப்போடு கூடியதென்றும் 'சிலப்பதிகார' உரைகளால் தெரிய வருகின்றது. கடவுளை வாழ்த்தும் பாடலுக்குத் தேவபாணி என்ற பெயர் பழங்காலத்தில் வழங்கிவந்தது. அதுபோலக் கடவுளைத் துதிக்கும் இசைப்பாடலுக்குத் தேவாரம் என்ற வந்தது.

தேவாரம் என்ற பெயர் பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. சிலாசாசனங்களில் திருப்பதியம் என்று தேவாரப்பாடல்களை குறித்திருக்கிறார்கள். நச்சினார்க்கினியர் திருப்பாட்டு என்று சொல்வர். ஔவையார் பாடிய "தேவர் குறளும் திருநான் மறைமுடிவும், மூவர் தமிழும்" என்னும் பாட்டில் மூவர் தமிழ் என்று கூறுகிறார். கி.ப். 1060 - ஆம் ஆண்டு எழுந்த கல்வெட்டு ஒன்றில் "தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் அம்பலத்தாடி திருநாவுகரையன்' என்ற தொடர் வருகிறது. கி.ப். 1245 - ஆம் ஆண்டில் எழுந்த மற்றொரு கல்வெட்டில் சீர்காழியில் 'திருமுறைத் தேவாரச் செல்வன் திருமடம்' என்ற ஒருமடம் இருந்த செய்தி வருகிறது.

திருஞானசம்பந்த சுவாமிகள் பாடிய பதிகங்கள் பதினாயிரம் என்றும், அவற்றிற் பல காலத்தால் அழிந்தன என்றும் கூறுகிறார்கள். இப்போது உள்ளவை 383 பதிகங்கள். அவற்றையே மூன்று திருமுறைகளாக நம்பியாண்டார் நம்பிகள் வகுத்தார். இக்காலத்தில் திருவிடைவாய் என்னும் தலத்திலே கிடைத்த கல்வெட்டில் அத்தலத்துக்குரிய திருப்பதிகம் ஒன்று இருந்தது. அது திருமுறைகளில் சேராதது. 136 பதிகங்களை முதல் திருமுறையாகவும், 122 பதிகங்களை மூன்றாவது த்இருமுறையாகவும் வகுத்திஉருக்கிறார்கள். இவை பண்புறையாக வகுக்கப் பெற்றவை. முதல் திருமுறையில் ந்ட்டபாடை, தக்கராகம், பழந்தக்கராகம், தக்கேசி, குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, யாழ்மூரி என்ற பண்களில் அமந்த திருப்பதிகங்கள் இருக்கின்றன. இந்தப் பதிகங்களின் பண்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய மரபிலே வந்த ஒரு பெண்மணியின் வாயிலாககாறிந்து நம்பியாண்டார் நம்பி அமைத்தனர்.
ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர்
சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவஸ்தலம் சீர்காழி. அங்கே வேத வேள்வித்துறை நிரம்பிய பெரியார் சிவபாத இருதயர். அவருடைய மனைவியார் பகவதியார். இருவருக்கும் இறைவன் திருவருளே உருவாக ஒர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இறைவன் அருளால் இரண்டு ஆண்டுகள் நிறைந்து மூன்றாம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் சிவபாத இருதயர் காலையில் நீராடும் பொருட்டுக் கோயிலைச் சார்ந்த பிரம தீர்த்தத்தை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய குழந்தை தானும் வருவேனென்று பிடிவாதம் செய்து அழுதான். வேறு வழி இன்றி குழந்தையையும் அழைத்துச்சென்றார். திருக்குளத்தின் கரையிலே குழந்தையய் அமரவைத்துவிட்டு குளத்தினுள் மூழ்கி நீராடச்சென்றார் சிவபாத இருதயர். மந்தர விதிப்படியே நீராடினார்."அகமருஷண ஸ்நானம்" என்பது ஒரு வகை. நீருக்குள்ளே மூழ்கியபடியே சில மந்திரங்களை சொல்லவேண்டும். அவர் அப்படி மூழ்கியிருக்கையில், கரையில் இருந்த குழந்தை தம் தந்தையாரைக் காணாமல் கோயிலின் சிகரத்தைப் பார்த்து, "அம்மா! அப்பா!" என்று அழுதான். அப்போது சீர்காழியில் கட்டுமலியின்மேல் கோயில் கொண்டிருக்கும் தோணியப்பர் உமாதேவியாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளி வந்தார். உமாதேவியார் பாலை ஒரு கிண்ணத்திற் கறந்து அதில் ஞானத்தைக் குழைத்து அழுதபிள்ளைக்கு ஊட்டினார். பின்பு இருவரும் மறைந்தனர்.

அம்மையின் திரு முலைப்பால் உண்டமையால் அந்தப் பிள்ளைக்குச் "சிவஞான உணர்ச்சி உண்டாயிற்று. அவர் திருஞான சம்பந்தர் என்ற திருநாமம் பெற்றார். 

குளத்தில் நீராடிவிட்டுக் கரைக்கு வந்த சிவபாத இருதயர் தம்முடைய குழந்தையய்ப் பார்த்தார். வாயில் பால் வழிய நிற்பதைக் கண்டு, "யார் உனக்குப் பால் தந்தார்"? என்று அதட்டிக் கேட்டார். ஞானசம்பந்தர் ஒரு விரலால் தோணியப்பரைச் சுட்டிக் காட்டி, "தோடுடைய செவியன்" என்ற பாடலைப் பாடி, "இவரே!" என்று காட்டினார். அந்தப் பாடலே திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய முதற்ப் பாடல். பிறகு பத்துப் பாடல்களாகப் பாடி அந்தப் பதிகத்தை நிறைவேற்றினார். தேவாரத்தின் முதல் பதிகம் அதுவே.

மூன்று ஆண்டுக் குழந்தை ஞான சம்பந்தர். அந்தக் குழந்தை மாசு மறுவற்ற தூய உள்ளம் படைத்தவர். இறைவனுடைய திருக்கோலத்தைப் பாடுகிறார். அந்தத் திருக்கோலத்தில் வேறு நிறமுள்ள பொருள்கள் பல இருந்தும் அவற்றில் இந்தக் குழந்தையின் உள்ளம் செல்லவில்லை. இறைவன் திருக் குழுத்தில் நீலநஞ்சம் இருக்கிறது; அவன் திருமுடியில் சிவந்த சடை இருக்கிறது; அங்கே பொன்னிறக் கொன்றையும் உண்டு. இப்படிப் பல நிறமுள்ள பொருள்கல் இரைவனிடம் இருந்தாலும் தூய வெண்பொருள்களிலேதான் அந்தக் குழந்தையின் கண் ஓடியது.

உலகில் உள்ள குழந்தைகளுக்கு வன்ண வண்ணமான விளையாட்டுப் பண்டங்களை வாங்கித் தருவார்கள். கன்ணைப் பறிக்கும் வண்ணப் படங்கள் உள்ளபுத்தகங்களை அளிப்பார்கள். உலகியலில் பல வகையான விளையாட்டு சாமான்களை வாங்கி குழந்தையய் மகிழ்விப்பார்கள். குழந்தைகள் பலவித வண்ணக்குவியலைக் கண்டு மகிழ்கின்றன. ஆனால் இந்தக் குழந்தையோ ஞானசம்பந்தக் குழந்தை. ஞானம் தூயது; அதற்கு வெண்மை நிறந்தான் அடையாளம். குணங்கள் பலவானாலும் அவற்றை மூன்றுக்குள்ளே அடக்குவார்கள். சத்துவம், ராஜசம், தாமசம் என்பவை அவை. இவற்றிற்கு முறையே வெண்மை, செம்மை, கருமை என்பவற்றை நிறமாகக் கூறுவார்கள். எம்பெருமாட்டி ஊட்டிய ஞானப்பால் வெண்மை நிறம் பெற்றது. அவர் கண்கள் இறைவன் திருக்கோலத்தில் சத்துவ குணத்தைக் காட்டும் வெண்மையய்யுடைய பொருள்களையெ கண்டு மகிழ்ந்தன.

தந்தையார் "யார் பால் கொடுத்தார்?" என்று கேட்டார். அதற்குக் குழந்தை நேர்முகமாகப் பதில் சொல்லவில்லை. யாரோ அயலார், அந்ததௌறவின் முறையும் இல்லாதார், தம் குழந்தைக்குப் பால் கொடுத்துச் சென்றாரோ என்ற ஐயத்தால் சிவபாத இருதயர் கேட்டார். சம்பந்தப் பெருமான், "இறைவன் கட்டளையிட இறைவி பால் கொடுத்தாள்" என்று சொல்லியிருக்கலாம். அவர் அப்படிச் சொல்லவில்லை. "இத்தகையதிருக்கோலத்தில் வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதோ இந்தப் பிரமபுரமாகிய சீர்காழியில் உள்ள பெருமான்" என்று சொல்கிறார். பாலைபற்றிய பேச்சே பாட்டில் வரவில்லை.

சம்பந்தப் பெருமான் வெறும் பாலை உண்ணவில்லை. மற்றவர்கள் தரும் பால் நாவுக்கு இனிமை தரும்; அப்பால் வயிற்றிற்குள்ளே சென்று பசியைப் போக்கும். அது உடம்புக்குப் பயனைத் தருவது. ஆனால், உமாதேவியார் தந்த பால் சிவஞானத்த்தை அருளியது. அது உள்ளத்தைக் கவர்ந்து அதன் வழியே உயிருக்கு இன்பந் தருவது. மற்றவர்களெல்லாம் பலபல நெறியிலே சென்று பலபல செயலும் பெற்றுப் பாசத்துக்கு உட்படுகிறவர்கள். ஞானசம்பந்தப் பெருமானோ, 'ஒரு நெறியில் வரும் ஞானத்தால், அரு நெறியிலே மனம் வைத்து உணர்ந்து, இறைவன் திருநெறித் தமிழ் ஒன்றையே உரைத்து, அவனைப் பணியும் தொண்டு ஒன்றையே செய்யப் புகுந்தவர்.

ஆகவே, "எனக்குப் பால் கொடுத்ததைத் தானே நீங்கள் கேட்கிறீர்கள்? அவன் என் உள்ளத்தையே கவர்ந்துவிட்டான். உலகில் யார் யாரையோ என்னியிருந்த பழைய உள்ளம் எனக்கு இப்போது இல்லை; தானே நினைத்துத் தானே இன்ப துன்ப உணர்ச்சி பெறும் உள்ளத்தை அவன் கவர்ந்து கொண்டான். இனி அந்த உள்ளம் என்னிடம் இல்லை. அவனிடம் இருக்கிறது; அவன் வசப்பட்டிருக்கிறது. அவன் அதனை எப்படியெல்லாம் இயக்குகிறானோ அப்படியெல்லாம் இயங்கும். நினிக்கச் செய்தால் நினைக்கும்; மறக்கச் செய்தால் மறக்கும். இனி ஒரு கணமும் அவனை விட்டுப் பிரியாது" என்பதை யெல்லாம் உள்ளடக்கி, 'என் உள்ளம் கவர் கள்வன், பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்" என்கிறார்.
உள்ளம் கவர் கள்வன்
பிறரை மயக்குபவர் தம்மிடத்திலுள்ள பொருளைக் காட்டியும், குணத்தைக் காட்டியும், செயலைக் காட்டியும் அவர் உள்ளத்தைத் தம் வசமாக்குவது வழக்கம். இங்கே, இறைவன் எவற்றைக் காட்டிச் சம்பந்தக் குழந்தையின் உள்ளத்தைக் கவர்ந்தான்?

தோடு உடைய செவியய்க் காட்டினான்; தான் ஏறி வந்த விடையையக் காட்டினான்; தூவென்மதியைக் காட்டினான்; உடம்பெல்லாம் பூசிய சுடலைப் பொடியய்க் காட்டினான். எல்லாம் வெண்மை நிறம் உடையவை. குழந்தை இறைவன் கஅட்டிய கோலத்தில் உள்ள மற்றவற்றைப் பின்னாலெ நினைத்து நினைத்துப் புகழப் போகிறது; ஆனால் முதல் முதலாக நினைவுக்கு வருபவவை இந்த வெண்மை நிறம் பெற்ற பொருள்களே. தூய சத்துவ குணத்தை நினைப்பிக்கும் வண்ணத்தை முதல் முதலாகக் கொள்ளை கொண்டன (இறைவனின் இருப்பிடமான திருக்கயிலாயமும் கங்கையும், திருநீறும் வெண்நிறங்களே).

"தோட்டை அணிந்த செவியை உடையவனாகி, இடப வாகனத்தின் மேல் ஏறிக்கொண்டு, ஒரு தூய வெள்ளிய மதியைத் திருமுடியிலே சூடி, மயானத்திலே உள்ள சுட்ட வெண்ணீறாகிய பொடியைப் பூசிக்கொண்டு வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்" - என்று சொல்கிறர் சம்பந்த மூர்த்தி நாயனார்.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசியெ என் உள்ளங்கவர் கள்வன்.
முதலிலே "தோடுடைய செவியன்" என்று தொடங்குகிறார். இறைவனுடைய திருவருளாலே ஞானம் பெற்றார் சம்பந்தப் பெருமான். அதற்கு உரிய கருவியாக இருந்தது உமாதேவியார் கிண்ணத்திற் கறந்ததூட்டிய பால். எனவே, உமா தேவியாரே ஞானத்தை வழங்கியவரென்று சொல்லலாம். "யார் பால் கொடுத்தார்?" என்று கேட்ட வினாவுக்கு, "இறைவன்' என்று சொல்வது முறையாகுமா? உமாதேவியல்லவா பால் கொடுத்தார்? அப்படியானால் அவரைத்தான் சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் அம்பிகை வேறு, இறைவன் வேறு அல்ல. சிவமும், சக்தியும் ஒருவரே. சிவபெருமானுடைய அருளே சக்தி. அதனால் அவர்களைத் தனித் தனியே பிரித்துச் சொல்வது உயர்வன்று. என்றாலுமவர்கள் வெவ்வேறு உருவுடையவர்களாகவும் தோன்றுவதனால் வேறு வேறாகப் புகழ்வதுமமுண்டு. வேறு வேறாகத் தோன்றினாலும் ஒருவரென்பதை அர்தநாரீசுவரத் திருக்கோலம் நமக்கு உணர்த்துகிறது. இடப்பாகம் முழுவதும் அம்பிகையின் உருவாகவும், வலப்பாகம் முற்றும் இறைவனது உருவாகவும் அமைந்தது மாதிருக்கும் பாதியனுடைய கோலம். அக்கோலத்தில் சிவமும் சக்தியும் வேறு வேறாகத் தோற்றினாலும் இருவராக இருக்கவில்லை. ஒருவராகவே இருந்தாலும் வேறு வேறு பகுதிகளாக இருக்கின்றனர். சம்பந்தருக்குப் பால் கொடுத்த உமா தேவியார் இறைவனுடைய வாம பாகத்திலே ஒன்றுபட்டு உறைகிறவர். அவரைத் தனியே பிரித்து நினைக்க மனம் வரவில்லை. ஆனாலுமவரைத்தான் முதலில் நினைக்க வேண்டுமென்று தோன்றியது.

மாதிருக்கும் பாதியனாகிய திருக்கோலத்தில் இறைவனுடைய இடப் பாகம் அம்பிகையின் பாகம்; அந்தப் பகுதியில் இடது செவியில் தோடு இருக்கிறது. மற்றொரு பகுதியில் குழை இருக்கிறது. "தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்" என்று மாணிக்க வாசகர் அந்தத் தொன்மைக் கோலத்தைப் பாடுகிறார். இறைவியைத் தனியே நினைக்காமல், இறைவனோடு ஒன்றுபட்டு நினைக்க வேண்டுமென்றால் அர்த்தநாரீசுவரருடைய வாமபாகத்தை நினைக்க வேண்டும். ஞானசம்பந்தர் அப்படித்தான் செய்கிறார். எடுத்தவுடன் "தோடுடைய செவியன்" என்று தொடங்குகிறறர். 'தோடுடைய" என்றதனால் அம்பிகையைய் நினைத்ததாகிறது. செவியள் என்று சொல்லாமல் செவியன் என்று சொன்னதனால் அவ்வம்பிகை இறைவனோடு ஒன்றியவள் என்பதைக் கூறியதாகிறது. எனவே அம்பிகையின் பகுதியை நினைப்பதனால் நன்றியறிவும், இறைவனோடு ஒன்றாக வைத்து நினைப்பதனால் உண்மையுனர்வுமுடையவர் என்பதைச் சம்பந்தப் பெருமான் புலப்படுத்திக் கொண்டார்.

வாம பாகத்தை நினைப்பவர் தோடுடைய செவியை நினிப்பானேன்? வேறு ஒன்றை நின்னைக்கலாமே!

ஞானசம்பந்தப் பெருமான் இனித் தேவாரப் பதிகங்களால் இறைவனுடைய புகழைப் பாடுவதையே தம்முடைய வாழக்கைப் பணியாக ஏற்றுக் கொள்ளப் போகிறார். அவ்வாறு பாடும்போது அந்தப் பாடல்கள் சென்று சேரும் இடம் செவியே அல்லவா? அதனால் அதை முதலில் பாடினார். இதைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் எடுத்துக் காட்டுகிறார்.

"பல்லுயிருங் களிகூரத் தம்பாடல் பரமர்பா செல்லுமுறை பெறுவதற்கு இருச்செவியைச் சிறப்பித்து" என்று அவர் காரணம் கூறுகிறார்.
தோடு என்னும் மங்கலச்சொல்
தோடு என்பது வெள்ளோலையைச் சுருட்டி அணிவது. அதனால் அதனைச் சுருள்தோடு என்றும் சொல்வார்கள். தமிழ்ப் பாடலை வெள்ளோலையில் எழுதுவது வழக்கம்.

"வெள்ளோலை, கண்பார்க்கக் கையால் எழுதானை" என்பது ஔவையார் பாட்டு. வெண் தோடாகிய ஒலையில் எழுதிச் சார்த்துவதற்கு உரிய தேவவரத்தை வெண்தோடு அணிந்த செவியிலே சார்த்துவது பொருத்தந்தானே?

அது மாத்திரமன்று, இறைவனுடைய திருக்காதில் இரண்டு கந்தருவர்கள் தோடாக இருந்து எப்போதும் இசை பாடிக்கொண்டே இருக்கிறர்களாம்.
"தோடுவார் காதன்றே தோன்றாத் துணைஐயர் பாடுவார் ஒர் இருவர்க்கு இட்ட படைவீடே"
என்று ஒருவர் பாடுகிறார். அந்தச் செவி இசைப்பாட்டைக் கேட்பதில் விருப்ப முடையது. ஞானசம்பந்தப் பெருமான் பாடும் தேவாரப் பதிகங்கள் பண்ணோடு கலந்த இசைப்பாடல்கள். அவற்றச் சார்த்துவதற்கு, முன்னமே இசையின் சுவைகண்ட இறைவனுடைய தோடுடைய செவியை யல்லாமல் வேறு சிறந்த இடம் ஏது?

எந்த நூலைத் தொடங்கினாலும் மங்கல மொழியில் தொடங்குவது வழக்கம். இன்ன இன்ன சொற்கள் என மங்கலமொழியில் தொடங்குவது வழக்கம். இன்னனென்ன சொற்கள் மங்கலமொழிகள் என்று பிற்காலத்தில் இலக்கணப் புலவர்கள் தொகுத்துக் கூறியிருக்கிறர்கள். ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பனுவலின் தொடக்கம் 'தோடுடைய செவியன்" என்று வரும் திருப்பதிகம். இறைவன்திருவருளால் எழுந்த எல்லாமே மங்கல வாக்குத்தான்.

அதனால் ஞானசம்பந்தர் திருவாக்கில் எழுந்த எல்லாமே மங்கல வாக்குத்தான். ஆனாலும் அத்தகைய சமாதானத்திற்கு அவசியமமில்லாமலே தோடு என்ற சொல் அமைந்திருக்கிறது. அதுவே மங்கலச் சொல்தான். பூ, சீர், எழுத்து, உலகமமென்று இக்காலத்தில் தொகுத்துச் சொல்லும் மங்கலச் சொல் வரிசையிலே தோடு என்ற சொல்லைக் காண முடியாது. ஆனாலும் தோடு என்பது மங்கலச் சொல்லே.

உமாதேவியின் பாகத்திலமைந்தது தோடு என்பதை முன்பே பார்த்தோம். தோடு மங்கலத்தைக் காட்டும் அறிகுறி. மங்கல வாழ்வையுடைய மங்கைமாரின் மங்கல அறிகுரியாக உள்ளவை மங்கல நாண், தோடு, திலகம், மை, மலர் முதலியன. அணிவகைகளில் தோடு திருமங்கலியத்துக்கு ஒப்பாகவே கொள்ளத்தகுவது. 

நித்திய சுமங்கலியாகிய அம்பிகையின் மங்கலத்துக்கு அறிகுறியாக அப்பெருமாட்டியுன் திருசெவியில் இருப்பது தோடு. அந்த மங்கல அணியைச் சொல்லும் மொழியும் மங்கல முடையதுதானே? எனவே, உலகத்துக்கு மங்கலம் செய்ய எழுந்த சம்பந்தப் பெருமானது திருவாக்கு, "தோடு" என்ற மங்கல மொழியை முதலிலே உடையதாக எழுந்தது என்றே கொள்ள வேண்டும். 

தேவாரம் வேதம் போன்றது. அதைத் தமிழ் வேதம் என்றே கூறுவர். வட மொழி வேதம் எழுதாக்கிளவி. தமிழ வேதமாகிய தேவாரம் எழுதெனும் மறை. வேதத்தைப் போன்ற சிறப்புடைய தேவாரப் பாடல்களில் வேதத்திலுள்ள தாரமான கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. வேதம் ஓம் என்று பிரணவத்துடன் தொடங்குகிறது. தமிழ் வேதமாகிய தேவாரம் ஓம் என்று தொடங்கவில்லை. ஆயினும் ஓம் என்ற எழுத்தின் பெரும் பகுதியாகிய ஓ என்ற எழுத்தோடு தொடங்குகிறது. மந்திரத்தை மறத்துச் சொல்வது வழக்கம். இங்கும் இந்த ஓ என்ற மந்திரத்தை வேறு ஒர் எழுத்தோடு சேர்த்து வைத்தார் ஞானசம்பந்தர். மிகவும் நுட்பமான பொருளையுடைய ஓங்காரத்தைத் தகர மெய்யோடு "தோடு" என்று தமிழ் வேதத்தைத் தொடங்கினார் சம்பந்தர். இதையும் சேக்கிழார் சொல்லுகிறார் :-
"எல்லையிலா மறைமுதல்மெய்யுடன் எடுத்த எழுதுமறை மல்லல்நெடுந் தமிழால் இம் மாநிலத்தோர்க் குரைசிறப்ப"
என்பது அவர் சொல்லும் விளக்கம். 'எல்லையில்லாத மறையின் முதல் எழுத்தை ஒரு மெய்யெழுத்தோடு சேர்த்து வைத்து எடுத்துக் கூறிய, எழுதவதற்குரிய வேதமாகிய வளம் மிக்க நீண்ட தமிழால் இந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்குப் புகழ் சிறக்கும்படியாக' என்பது இதன் பொருள்.

மந்திரத்தை மறைத்துச் சொல்வார் தகர மெய்யோடு சேர்த்து, தோ என்று தொடங்கினார் என்பதைக் கண்டோம். அப்படி ஓவை ஓட்டுவதற்கு வேறு மெய்யைக் கொள்ளாமல் தகரத்தைக் கொண்டதற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா? தமிழ் வேதமாகிய இதைத் தொடங்குகையில் தமிழ்ப் பண்பையும் வேதப் பண்பையும் ஒன்று படுத்திப் பாடத் திருவுள்ளங் கொண்டார் ஞானசம்பந்தர். தமிழ் என்ற பெயரே 'த' என்பதை முதலாக உடையது. இலக்கணத்தின்படி 'த' என்பதன் மேல் வேதத்தின் முதலாகிய 'ஓ' வை ஏற்றிச் சொன்னார். தமிழ் மொழியில் வேதக் கருத்தை அமைத்துச் சொல்ல வந்த பெருமான் அதற்கு அறிகுறியாக எடுத்த எடுப்பில் முதல் அழுத்தில் அந்தத் தன்மை புலப்படும்படி தமிழ் என்பதன் முதல் எழுத்தையும், வேதத்தின் முதலெழுத்தையும் 'தோ' என வைத்தார் என்று சொல்வது சாலப் பொருந்தும்.

'தமிழிலே வேதக் கருதைச் சொல்ல வந்த எழுதும் மறையாகிய தேவாரம் இறைவனுடைய திருச்செவிக்கண் சார்த்தத் தகுவது. அதனைப் பாடும் ஆற்றலைத் தந்தவர் இறைவனின்றும் வேறலலாத அம்பிகை. அவ்வம்பிகையின் வாம பாகத்தின் பகுதியாகிய திருச் செவியில் வெள்ளைத்தோடு உண்டு. அந்தத் தோடு இசை பாடுவார்க்குரியவீடு. தமிழ் எழுதும் ஓலையாலானது என்னும் இத்தகைய நினைவுகளை யெல்லாம் தோற்றந் செய்வது ' தோடுடைய செவியன்' என்னும் தொடர்.
அம்பிகையும் சிவனும் வேறா?
தோடுடைய செவியனாக உள்ளவன் தோணியப்பனாகிய இறைவன். இறைவன் குணங்குறி கடந்த தன் நிலையில் இருந்தால் அவனுதைய திருவருளை யாரும் பெறமுடியாது. அவன் ஆருயிர்களிடத்தில் திருவருள் பூண்டவனாதலின் உருவமுதையவனாக எழுந்தருள்கிரான். சிவமும் சக்தியும் ஒன்றுபட்டு இருந்தால் உயிர்களுக்குப் பயன் இல்லை. இறைவனிடம் உள்ள அருள் வெளிப்பட வேண்டும்; இல்லையானால் இறைவனுக்க்கே வேலை இல்லை.
"சிவமெனும் பொருளும் ஆதி சக்தியொடு சேரின் அத்தொழிலும் வல்லதாம்; அவன் பிரிந்திடின் இயங்கு தற்கும் அரிதாம்"
என்பது சௌந்தரிய லகரி. ஆதலின் அருள் வெளிப்பாட்டையே இறைவன் மாதிருக்கும் பாதியனாக நின்ற திருக்கோலம் காட்டுகிறது; தோடுடைய செவியனாகுந்திருக்கொலமும் அதுதான். அருள் வெளிப்பாட்டின் முதல் தோற்றம் அது. அதன்பின் தனித் தனியே இறைவனும் இறைவியுமாக விடையின் மேல் எழுந்தருள்கிறார்கள். அப்படி வருவது அடியார்களுக்கு அருள்புரிவதன் பொருட்டேயாகும்.

அடியாரைக் காக்கும் பொருட்டு அருளைத் தாங்கிநிற்கும் பெருமானுக்கு அருள் மிகுதியானால் அடியார்கள் அவனிடம் வராவிட்டாலும் அவன் அவர்களிடம் எழுந்தருள்வான். அதற்கு ஏற்றபடி அவனுக்கு விடை வாகனமாக இருக்கிறது. அறமே விடையாக இறைவனித் தாங்குகிறது. எல்லோருக்கும் இறைவனை வழிபடுவது அறம். அன்பர்களைப் பாதுகாத்தல் இறைவனுக்கு அறம்.
"தன்கடன் அடியேனையுந் தாங்குதல்"
என்பது அப்பர் அருள் மொழி. அடியாரைத் தாங்கும் அறமே இறைவனுக்கு வாகனமாக நிற்கிறது. அதன்மீது இறைவன் எழுந்தருள்கிறான். 

உயிர்களையெல்லாம் பாதுகாக்கும் அருளையுடையவன் இறைவன்; அதனினும் சிறப்பாக அடியார்களைத் தானே விடையேறி நாடிச் செல்பவன் அவன். அதனையும் வடச்சிறந்த பண்பு ஒன்று அவனிடம் உண்டு. தூவெண் மதி சூடிவரும் தோற்றம் அவனுடைய கருணையின் உச்ச நிலையைக் காட்டுகிறது. அதை அடுத்தபடி நினைக்கிறார் சம்பந்தர். எப்படி? ..........