வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
40. அஞ்ஞானத் தன்னை யகல்விக்கும் நல்லறிவே
பதப்பொருள் : வெய்யாய் - வெம்மையானவனே, தணியாய் - தன்மையானவனே, இயமானன் ஆம் விமலா - ஆன்மாவாய் நின்ற விமலனே, பொய் ஆயின எல்லாம் - நிலையாத பொருள்கள் யாவும், போய் அகல - என்னை விட்டு ஒழிய, வந்தருளி - குருவாய் எழுந்தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி - மெய்யுணர்வு வடிவமாய், மிளிர்கின்ற - விளங்குகின்ற, மெய்ச்சுடரே - உண்மை ஒளியே, எஞ்ஞானம் இல்லாதேன் - எவ்வகையான அறிவும் இல்லாத எனக்கு, இன்பப் பெருமானே - இன்பத்தைத் தந்த இறைவனே, அஞ்ஞானந்தன்னை - அஞ்ஞானத்தின் வாதனையை, அகல்விக்கும் - நீக்குகின்ற, நல் அறிவே - நல்ல ஞானமயமானவனே.
விளக்கம் : இறைவன் தீயாய் நின்று வெம்மையைக் கொடுத்து, நீராய் நின்று குளிர்ச்சியைக் கொடுத்து, உயிருக்கு உயிராய் நின்று நல்வழியைக் காட்டி அருளைப் புரிகின்றான் என்பது,
"வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா"
என்றதனால் கிடைக்கிறது.
ஒளியைக் கண்டதும் இருள் மறைவது போல, மெய்ஞ்ஞானத்தால் அஞ்ஞானம் விலகுகிறது. இறைவன் குருவாகி வந்து அருள்வதனால் மெய்ஞ்ஞானம் கிடைக்கிறது என்பதை, "பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே" என்றார். அஞ்ஞானம் வாதனையாய் நில்லாது நீக்கப்பட்டுப் பற்றற்றுக் கழிதலும் இறைவன் திருவருளாலேயே என்பதற்கு, "அஞ்ஞானம் தன்னை யகல்விக்கும் நல்லறிவே" என்றார்.
இவற்றால் இறைவன் குருவாய் வந்து அருளுதல் கூறப்பட்டது.