சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
20. முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழிலிறைஞ்சி
பதப்பொருள் : கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி - நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து, எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி - நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கிய பின், சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் - சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி, சிந்தை மகிழ - மனம் மகிழும்படியும், முந்தை வினை முழுதும் ஓய - முன்னைய வினை முழுமையும் கெடவும், சிவபுராணந்தன்னை - சிவனது அநாதி முறைமையான பழமையை, யான் உரைப்பன் - யான் சொல்லுவேன்.
விளக்கம் : இறைவன் காட்டிய அருளினாலன்றி அவனது திருவடியைக் காண முடியாது ஆதலால், "தன் கருணைக்கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கெட்டா எழிலார் கழலிறைஞ்சி" என்றார். "காண்பார் யார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே?" என்றார் திருநாவுக்கரசரும்.
பிற எல்லாப் பொருள்களையும் இறைவன் திருவருளாலே அறிந்து வரும் உயிர், இறைவனை அறிவதும் அவனருளாலே என்பது, "அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்றதில் நன்கு தெளிவாகும்.
இறைவனது பொருள் சேர் புகழைப் பாடினால் இருள் சேர் இருவினையும் சேரா என்பது மறைமொழி.
"இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு".
இக்கருத்தே, "சிவபுராணந்தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்" என்றதில் அமைந்திருத்தல் அறியத்தக்கது.
இவற்றால் வருபொருள் உரைக்கப்பட்டது.