வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

10. சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

பதப்பொருள் : வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க - மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக; பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க - பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக; புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க - தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக; கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க - கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் மேம்படுக; சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரப் பண்ணுகிற சிறப்புடையவனது திருவடி மேம்படுக.

விளக்கம் : மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது, "வேகங் கெடுத்தாண்ட வேந்தன்", "பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்" என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்; பிறை, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள்.

இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவே வைத்துச் சிறிதும் விளங்கித் தோன்றாதிருத்தலின், "புறத்தார்க்குச் சேயோன்" என்றார்.

இறைவன் விரும்பியிருக்குமிடங்கள் இரண்டு. ஒன்று, நெஞ்சத்தாமரை; மற்றொன்று, துவாதசாந்தப் பெருவெளி; அஃதாவது, தலைக்குப் பன்னிரண்டு அங்குலங்களுக்குமேலுள்ள இடம். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிப்பிட, "கரங்குவிவார், சிரங்குவிவார்" என்று கூறினார்.

இவற்றால் இறைவன் வெற்றி கூறப்பட்டது.