வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

85. ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

90. தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்

95. பல்லோரும் ஏத்தப் பணிந்து.

பதப்பொருள் : வேற்று விகார - வெவ்வேறு விகாரங்களையுடைய, விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் - ஊனாலாகிய உடம்பினுள்ளே தங்கிக் கிடக்கப் பொறேன், எம் ஐயா - எம் ஐயனே, அரனே - சிவனே, ஓ என்று என்று - ஓ என்று முறையிட்டு, போற்றி - வணங்கி, புகழ்ந்து இருந்து - திருப்புகழை ஓதியிருந்து, பொய் கெட்டு - அறியாமை நீங்கி, மெய் ஆனார் - அறிவுருவானவர்கள், மீட்டு இங்கு வந்து - மறுபடியும் இவ்வுலகில் வந்து, வினைப்பிறவி சாராமே - வினைப் பிறவியையடையாமல், கள்ளப்புலம் குரம்பைக் கட்டு - வஞ்சகத்தையுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை, அழிக்க வல்லானே - அறுக்க வல்லவனே, நள் இருளில் - நடு இரவில், பயின்று - மிகுந்து, நட்டம் ஆடும் - நடனம் செய்கின்ற, நாதனே - இறைவனே, தில்லையுள் கூத்தனே - திருத்தில்லையில் நடிப்பவனே, தென்பாண்டி நாட்டானே - தென்பாண்டி நாட்டையுடையவனே, அல்லல் பிறவி அறுப்பானே - துன்பப் பிறப்பை அறுப்பவனே, ஓ என்று - ஓவென்று முறையிட்டு, சொல்லற்கு அரியானைச் சொல்லி - துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, திருவடிக் கீழ் சொல்லிய பாட்டின் - அவனது திருவடியின்மீது பாடிய பாட்டின், பொருள் உணர்ந்து சொல்லுவார் - பொருளையறிந்து துதிப்பவர், பல்லோரும் ஏத்த - எல்லாரும் துதிக்க, பணிந்து - வணங்கி, சிவபுரத்தினுள்ளார் - சிவநகரத்திலுள்ளவராய், சிவன் அடிக்கீழ் செல்வர் - சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலை பெறுவர்.

விளக்கம் : வேறு வேறு விகாரமாவன, நரை திரை மூப்பு பிணி சாக்காடு என்பன. பிறவியை அறுக்க விரும்புவார்க்கு இவ்வுடம்பும் சுமையாகும். ஆதலின், "விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்" என்றார். நாயனாரும், "பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை," என்று கூறினார்.

பொய்ப்பொருளைக் காண்பது அறியாமை; மெய்ப்பொருளைக் காண்பது அறிவு. மெய்ப்பொருளைக் கண்டவர், "மற்றீண்டு வாரா நெறி தலைப்படுவர்." ஆதலின், சுவாமிகள் பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வாராராகக் கூறினார்.

நள்ளிருள் - சர்வ சங்கார காலம். இறைவன் விரும்பி ஆடும் இடம் தில்லை. சோமசுந்தரப் பெருமானாய் வீற்றிருந்து திருவிளையாடல் புரிந்த இடம் மதுரை. இரண்டையும் குறிப்பிட, "தில்லையுட்கூத்தனே, தென்பாண்டி நாட்டானே" என்றார். தில்லை என்பது சிதம்பரம். பாண்டி நாட்டின் தலைநகரம் மதுரை.

இவற்றால் இறைவனே இடைவிடாது துதிப்பவர் சிவபுரத்துச் செல்வர் என்பதும், இச்சிவபுராணத்தை ஓதுவார்க்கு வரும் பயனும் கூறப்பட்டன.